பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்....அடுத்து என்ன?

'எனக்கு சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது' என அவர் சாதித்து வந்த நிலையில், தற்போது 'நான் சந்திரசேகரை சந்தித்துள்ளேன்' என அவர் ஒத்துக்கொண்டதாக செய்திகள்...

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், துருவித் துருவி மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, அஇஅதிமுக தலைவர் டிடிவி தினகரன் தற்போது, ‘இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை எனக்கு தெரியும்’ என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

முன்னதாக, அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்பதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பேரம் பேச முயன்றதாக, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘எனக்கு சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது’ என அவர் சாதித்து வந்த நிலையில், தற்போது ‘நான் சந்திரசேகரை சந்தித்துள்ளேன்’ என அவர் ஒத்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று (செவ்வாய்) மாலை 5 மணிக்கு மீண்டும் தினகரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், தினகரனின் வக்கீல் இன்று காலை 11 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்றும், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் மதியம் 2 மணிக்கு ஆஜராக வேண்டுமென்றும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கைதாகியுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கொச்சி வீட்டிலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கு பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தேடி வருகின்றனர். சுகேஷ் சந்திரசேகர் – தினகரன் ஆகியோர் இடையே நடந்த மொபைல் பரிமாற்ற விவரங்கள் குறித்த தகவல்களையும் அவர்கள் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக, தினகரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபின் பத்து நாட்களுக்கு தனது நண்பர் மல்லிகார்ஜுனா வீட்டில் தான் அவர் தங்கியிருந்தார். இதையடுத்து, கடந்த ஞாயிறன்று மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனனுடன் வைத்து தினகரன் போலீசாரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

சனிக்கிழமை, தினகரனிடம் டெல்லி துணை கமிஷனர் இந்த வழக்கு தொடர்பான பல கேள்விகளை முன்வைத்தார். அப்போது, இரட்டை இல்லை சின்னத்தை மீட்க இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடிக்கு பெற பேசியது தொடர்பாகவும், சுகேஷை எத்தனை முறை சந்தித்துள்ளீர்கள் என்றும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரையாவது இதுதொடர்பாக சந்தித்துள்ளீர்களா என்பது குறித்தும் அவர் கேள்விகளை தினகரன் முன் அடுக்கினார்.

அதற்கு முன்பே கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும், பிஎம்டபிள்யூ மற்றும் மெர்டசிஸ் ஆகிய இரண்டு சொகுசுக் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close