கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

டெல்லி மால் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதனுள் இறங்கிய துப்புரவு தொழிலாளர்களான சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியில் உள்ள மால் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதனுள் இறங்கிய
துப்புரவு தொழிலாளர்களான சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,

டெல்லியில் ஆனந்த் விஹார் பகுதியில் அமைந்த மால் ஒன்றில் சனிக்கிழமை, துப்புரவு தொழிலாளர்களான சகோதரர்கள் இருவர் ஜஹாங்கீர் (வயது 24), இஜாஸ் (வயது 22) ஆகியோர், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதனுள் இறங்கினர். அப்போது, அந்த கழிவுநீர் தொட்டியின் ஆழத்திற்குள் அவர்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட துப்புரவு தொழிலாளரான அவர்களது தந்தை யூசுஃப் (வயது 50) அவர்களை காப்பாற்ற முயன்று அவரும் அதில் விழுந்தார்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மூவரையும் மீட்க முயன்றனர். ஆனால், அதில், ஜஹாங்கீர் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டார். இஜாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர்களது தந்தை யூசுஃப் மற்றும் மீட்கும்போது காயமடைந்த தீயணைப்பு துறையை சேர்ந்த மஹிபால் என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

×Close
×Close