கடந்த ஆகஸ்டு மாதம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் உயிரிழக்க நேர்ந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, கேரளா மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. ஆனால், இப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இரு கேரள கிராமங்கள் இணைந்து ரூ.11 லட்சம் திரட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயன் என்பவர், தன் குடும்பத்துடன் கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவர், அம்மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் மற்றும் பல்லம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள மக்களின் துணிகளுக்கு, கடந்த 20 வருடங்களாக ‘அயர்ன்’ செய்யும் தொழில் நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஜெயனுக்கு கடந்த 7 வருடங்களாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், நிலைமை மிகவும் மோசமடையவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மனைவி மாரியம்மாள், தன் கணவருக்காக சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்தார். மருத்துவ பரிசோதனையில், மாரியம்மாளின் சிறுநீரகம் ஜெயனுக்கு பொருந்திவந்தது. ஆனால், அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ.10 லட்சம் தேவைப்பட்டது.
’அயர்ன்’ செய்து பிழைப்பு நடத்திவரும் ஜெயன், ரூ.10 லட்சத்துக்கு எங்கே போவார்? ஆனால், கேரள மக்களின் அன்பு சாதாரணமானது அல்ல. ஜெயன் வீடு, வீடாக துணிகளை வாங்கி அயர்ன் செய்யும், சிங்காவனம், மற்றும் பல்லம் கிராம மக்கள் அளப்பறிய அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இரு கிராம மக்களும் இணைந்து 5 மணிநேரத்தில், ஜெயன் அறுவை சிகிச்சைக்காக, ரூ.11 லட்சத்தை திரட்டியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட இத்தொகை அதிகமாகும்.
“பணம் இல்லாத்தால் நான் இறந்துவிடுவேன் என பயந்தேன். ஆனால், இந்த மக்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என்பது இப்போது புரிகிறது”, என ஜெயன் உணர்ச்சிப்பெருக்கில் கூறுகிறார். இவருக்கு, நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்காக பணம் சேர்க்க இரண்டு கிராமங்களிலும் உள்ள 5 வார்டு உறுப்பினர்களே இணைந்து, சுமார் 2,000 முதல் 2,500 வீடுகளுக்கு சென்று பணம் திரட்டியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரையிலும் மக்கள் பணம் தந்திருக்கின்றனர். பல கூலி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் கூலியை ஜெயனுக்காக தந்திருக்கின்றனர்.
ஜெயனுக்கு உதவ கேரள மக்கள் தங்கள் மதம், சாதி, சார்ந்த அரசியல் கட்சி என எதையுமே பார்க்கவில்லை. மனிதத்திற்காக ஒன்றுகூடினர். சிகிச்சை அளிக்க முன்வராமல் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் இறந்தபோது, கேரளாவில் மனிதம் இறந்துவிட்டது என பலரும் பேசினர். அந்த மனிதம், ஜெயனுக்காக உதவ முன்வந்த கேரள மக்களால் மீண்டிருக்கிறது.