நவம்பர் 5-ம் தேதி நெட் தேர்வு நடத்தப்படும் என யு.ஜி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெட் தேர்வுக்கான அறிவிப்பை யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்சி செய்வதற்கும் நெட் தேர்வு நடத்தப்படுகிறது. யு.சி.சி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில், சி.பி.எஸ்.சி இந்த நெட் தேர்வை நடத்துகிறது. 84 பாடங்களுக்கு நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்காக நெட் தேர்வு நவம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நெட் தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டிய கடைசி தேதி செம்டம்பர் 12-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 91 தேர்வு மையங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான கட்டணமானது, பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.500 மற்றும் பட்டியலினத்தோருக்கு ரூ.250 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு சி.பி.எஸ்.சி இணையதளத்திற்கு செல்லவும்.