ஜி.எஸ்.டி. வரி காரசார விவாதங்களுக்குப் பின் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி என்பது அதிகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம், பெண்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான சானிட்டரி நாப்கின்களுக்கு 12% வரியும், விருப்பம் சார்ந்த பொருட்களான பொட்டு, வளையல்கள் உள்ளிட்டவற்றிற்கு வரிவிலக்கு அளித்திருப்பதும் விவாதிக்கப்பட வேண்டியது.
சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு ஆரோக்கியமானதா என்பதிலும் இருவேறு கருத்துகள் நிலவி வந்தாலும், ஒப்பீட்டளவில் அவை சுகாதாரமானதாகவே கருதப்படுகிறது. ஆனாலும், இன்னும் பின்தங்கிய கிராமங்களில் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவது குறைவானதாகவே உள்ளது. இந்த நிலையில், நாப்கின்கள் மீது 12% ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதால் அதன் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, விருப்பத்தின்பேரில் மட்டுமே பெண்கள் பயன்படுத்தும், அத்தியாவசியமில்லாத பொட்டு, வளையல்கள், குங்குமம் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சானிட்டரி நாப்கின்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 12% வரியை திரும்ப பெற வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.