சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருந்தது. அதன்படி, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.21.48 என்றும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.17.33 என்றும் கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வருகின்றது. இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையை நாள் தோறும் மாற்றி அமைக்கும் முறையை ஜூலை 16-ம் தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதியை ஒப்பிடும்போது தற்போதைய நிலையில், பெட்ரோல் விலை ரூ.7.80 வரை உயர்ந்தது. இதேபோல, டீசல் விலை ரூ.5.70 அதிகரித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்தபோது, கலால் வரியை அதிகரித்த மத்திய அரசு, தற்போது கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்காக அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட நிலையில், இன்று(அக்டோபர் 4) முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் மீது 11 முறை உற்பத்தி வரியை அதிகரித்த மத்திய அரசு, தற்போது முதல் முறையாக உற்பத்திவரியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம், பெட்ரோல், டீசல் சில்லரை வினியோத்தில் எதிரொலிக்கிறது. மேலும், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான சில்லரை விலையை குறைக்கும் வகையில் கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் இனி வரும் காலத்தில், மத்திய அரசுக்கு சுமார் ரூ.13,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளததால், பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைகிறது. இன்று முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.