இங்கு கரும்பலகைகள் இல்லை, நோட்டுப் புத்தகங்கள் இல்லை: காட்டுப் பள்ளிக்கு ஒரு விசிட்

இப்ப நான் சொல்லப்போற பள்ளி அப்படியொரு பள்ளிதான். காட்டிற்குள் தான் அந்த ‘சாரங்’ என்ற காட்டுப்பள்ளி உள்ளது. வாருங்கள், ஒரு விசிட் அடிப்போம்.

கரும்பலகையில் என்ன எழுதியிருக்கிறதோ அதனை அப்படியே நோட்டில் எழுதி, மனப்பாடம் செய்யும் முறைதான் இன்று பெரும்பாலான பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதனால், தான் படிப்பவற்றுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகளை மாணவர்கள் உணருகின்றனர். அதற்காக, தாவரங்கள், விலங்குகள் பற்றி படிக்க காட்டுக்கா செல்ல முடியும்? என கேட்கிறீர்களா? இப்ப நான் சொல்லப்போற பள்ளி அப்படியொரு பள்ளிதான். காட்டிற்குள் தான் அந்த பள்ளி உள்ளது. வாருங்கள், ஒரு விசிட் அடிப்போம்.

கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதிகளான கோபாலகிருஷ்ணன் – விஜயலஷ்மி தான் ‘சாரங்’ எனும் காட்டுப்பள்ளியை உருவாக்கினர். 1980-களில் கோபாலகிருஷ்ணன் பாலக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய காலம். அப்போது, தன் வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து தினமும் படிப்பதால் ‘போர்’-ஆக உணர்ந்ததை இவர் அறிந்தார். அதனால், தன் மாணவர்களை ஆறு, தபால் நிலையம், டெலிஃபோன் எக்ஸ்சேஞ் அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு அவ்வப்போது அழைத்து செல்வார்.

கோபாலகிருஷ்ணன் அவ்வாறு செய்வதை மற்ற ஆசிரியர்கள் எதிர்த்தனர். அதனால், ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார் கோபால கிருஷ்ணன்.

ஆனால், இவருக்கும் அவரது மனைவி விஜயலஷ்மிக்கும் ‘கற்பித்தல்’ என்றால் பிரியம். அப்போது தங்களுடைய குழந்தை இம்மாதிரியான கல்வி முறையில் சிக்கிவிடக் கூடாது எனக்கருதி, ‘சாரங்’ எனும் காட்டுப்பள்ளியை உருவாக்கினர்.

1983-ஆம் ஆண்டு மலை உச்சியில் ஒரு நிலத்தை வாங்கி ‘சாரங்’ பள்ளியை ஆரம்பித்தனர். மாற்றுக் கல்விக்கான சோதனை முறை என்றுதான் இதனை அவர்கள் கருதினர். இந்த பள்ளியை ஒரு கிராம பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு.

ஆரம்பத்தில், பழங்குடி மக்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ‘சாரங்’ பள்ளியில் இணைந்தனர்.

இந்த பள்ளியின் பாடத்திட்டமே, கிடைக்கும் வளங்கள் மூலம் வாழ கற்றுக்கொள்வதுதான்.

இந்த பள்ளியில் மாணவர்களே அனைத்தையும் உருவாக்கினர். களிமண்ணால் வீடுகள் உருவாக்குதல், இயற்கை விவசாயம், தீ தடுப்பு முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அரசியல், சர்வதேச உறவுகள், பாலியல் கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவை மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன.

அவர்களுடைய மகன் கௌதம் இதற்கு முன்பு வேறு பள்ளிகளுக்கு சென்றதில்லை. இங்கு படிப்பதால், ஆறு மொழிகள் பேசுகிறார். புகைப்படம் எடுத்தல், நெப் டிசைனிங் என எல்லா விதமான திறமைகளும் கௌதமுக்கு இப்போது கை வந்த கலையாகி விட்டன.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, கடும் நிதி நெருக்கடியால் 1995-ஆம் ஆண்டு தொடர்ந்து செயல்பட முடியாமல்போனது. அப்போது யார் தெரியுமா பள்ளியை மீண்டும் திறக்க உதவியது. கௌதம். கௌதமுக்கு இப்போது வயது 36. அவரது மனைவி அனுராதா பொறியாளர். ‘சாரங்’ பள்ளியின் கடன்களை செலுத்த எல்லா விதமான வேலைகளையும் செய்தார்.

2013-ஆம் ஆண்டு கௌதம் ‘சாரங்’ பள்ளிக்கு தன் மனைவி, குழந்தைகளுடன் வந்துவிட்டார். தான் பிறப்பதற்கு முன்பே தன் பெற்றோர் கண்ட கனவை தன் குழந்தைக்கும் நினைவாக்குகிறார் கௌதம். கௌதமின் தங்கைகளும் இதே பள்ளியில் தான் படித்தனர்.

கேரளாவுக்கு சென்றால் ‘சாரங்’ பள்ளிக்கு செல்ல மறந்துவிடாதீர்கள். ‘இயற்கையை’ முழுமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட அந்த பள்ளிக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close