தூய்மை பற்றி நம் ஊரில் கேட்டால், சிங்கப்பூரை பார், ஜப்பானை பார், ஐரோப்பிய நாடுகளை பார் என மேலை நாடுகளை பற்றி பெருமை பொங்க பேசும் நாம், நம் நாடும் இருக்கிறதே என்ற ஏளனப் பேச்சுகளையும் பேசத் தவறுவதில்லை.
இவ்வாறு பேசிக் கொண்டே பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு சாலையில் எச்சில் துப்புவதும், சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும், மலம் கழிப்பதையும் ஏதோ தனி மனித உரிமை போன்று கட்டிக் காத்து வருகிறோம். திறந்த வெளியில் மலம் கழிப்பதில் அலாதி சுகம் என்றும், பூமிக்கு போடும் உரம் என்ற பேச்சுகளுக்கும் பஞ்சமில்லை.
தூய்மை என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவாகும். சுதந்திரத்தை விட சுத்தம் மிகவும் முக்கியம் என்றவர் அவர். இதனை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று காந்தியின் பிறந்தநாளன்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். வருகிற 2019-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்றும் அன்றைய தினம் பிரதமர் மோடி சிலாகித்தார். டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்துவதை பிரதமர் மோடி தானே முன்னின்று நடத்தினார்.
திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல், திறந்தவெளி மலங்கழிப்பை 2019-ஆம் ஆண்டுக்குள் ஒழித்துகட்டல் உள்ளிட்ட உயர் நோக்கங்களைக் கொண்ட தூய்மை இந்தியா இயக்கம், நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் இந்த எண்ணம் வரவேற்கத்தக்கது என்றாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல தான் இத்திட்டம் உள்ளது. ஆளுங்கட்சியினர் ரோட்டில் குப்பையை கொட்டி அள்ளுவது என நடைமுறையில் இத்திட்டம் கேலிக் கூத்தாக தான் உள்ளது. இத்திட்டத்தில் உளமார, தொண்டு மனப்பான்மையுடன், மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகக் இருக்கும். இதனை விடுத்தது விளம்பரப் பார்வையுடன் இதனை செய்தல் என்பது சரி இருக்காது.
மேலும், பொதுவெளியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பேசும் ஆளுங்கட்சி அமைச்சர்களே இதனை மீறுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. உதராணமாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதுவும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பாதுகாப்புடன் ஓரமாக அவர் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளே இத் திட்டத்திற்கு வியாதியாகி வருகின்றனர். இதனை தவிர்த்து தூய்மை இந்தியா திட்டத்தின் உன்னதமான நோக்கத்தை நோக்கி பயணிப்போம்.!!