மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சில் விடைபெறுகிறது. அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்கிறது.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பது, மருத்துவக் கல்லூரிகளின் தரம், கல்வி முறை ஆகியவற்றை நிர்ணயிக்கும் பணியை இந்திய மருத்துவ கவுன்சில் செய்து வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் 2010-ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை மற்றும் தங்கம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பதிலும், அனுமதியை புதுப்பிப்பதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக அம்பலமானது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி முறையை சீரமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய ரஞ்சித்ராய் சவுத்ரி குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது குறித்து ஆய்வு செய்தது. இந்த இரு குழுக்களும் மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக புதிய ஆணையத்திற்கு பரிந்துரை செய்தன.
அதன் அடிப்படையில், ‘தேசிய மருத்துவ ஆணையத்தை’ (நேஷனல் மெடிக்கல் கமிஷன்) அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கான மசோதாவுக்கு ஒப்புதலை நேற்று (டிசம்பர் 15) மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்திய உயர் கல்வித் துறையில் மிக முக்கியமான மாற்றமாக இது கருதப்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின்படி, மத்திய கேபினட் செயலாளர் தலைமையிலான ஒரு ‘தேடுதல் குழு’, 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தை தேர்வு செய்யும். இந்த ஆணையம், தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும்.
இந்த புதிய மசோதாவில், ‘வெளியேற்றும் தேர்வு’ என்கிற புதிய முறை இடம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த 3 ஆண்டுகளில் அது அமுலுக்கு வரும். அதன்படி, மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறுகிறவர்கள், குறிப்பிட்ட காலத்தில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கமாக மருத்துவ ஆலோசனைக் கவுன்சில் அமையும். இதில் மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இருக்கும். தற்போது மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களில் அங்கீகாரத்தை புதுப்பிக்க மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில், ஒவ்வொரு கல்லூரியும் தங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கோர்ஸ்களுக்கு ஒருமுறை அங்கீகாரம் பெற்றால் போதுமானது.
புதிய கோர்ஸ்கள், முதுநிலை படிப்புகள் உருவாக்க கல்லூரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. எனினும் தேசிய மருத்துவ ஆணையம் இடையிடையே ஆய்வுகளை செய்யும். நாடாளுமன்றத்தின் கருத்து அடிப்படையில் இதில் உரிய மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நடைமுறையில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளதாக கருதப்படுகிறது.