மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இது தொடர்பாக அதிமுக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பூர்வீகம், தமிழகத்தின் திருச்சி மாவட்டம். யாரும் எதிர்பாராதவிதமாக இவரை மத்திய வெளியுறவுத் துறை கேபினட் அமைச்சராக நியமனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அமைச்சராக பொறுப்பேற்கிற ஒருவர், அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஜெய்சங்கருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி
உயர் அதிகாரியாக பணியாற்றிய ஜெய்சங்கரை தேர்தல் களத்தில் நிறுத்தி பலப்பரீட்சை பார்க்க பாஜக தயாரில்லை. எனவே அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. எனவே மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு நேரடி பிரதிநிதித்துவம் இல்லை.
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர்தான். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் அவர். மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல பிரச்னைகளில் தமிழகப் பிரதிநிதியாக இயங்கினார் அவர்.
அதேபோல இந்த முறை கூடுதலாக ஜெய்சங்கரையும் தமிழக முகமாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு அம்சமாகவே அண்மையில் இந்தி மொழித் திணிப்பு விவகாரம் எழுந்ததும், ‘எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ என தமிழில் ட்வீட் செய்தார் அமைச்சர் ஜெய்சங்கர்.
தவிர, ஜெய்சங்கரை இன்னமும் தமிழகத்துடன் நெருக்கமாக்கும் விதமாக அவரை தமிழகத்தில் இருந்தே ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கும் திட்டத்தையும் பாஜக கைவசம் வைத்திருக்கிறது. ஜூலையில் தமிழக ராஜ்யசபா எம்.பி.க்களில் கனிமொழி, மைத்ரேயன் உள்பட 6 பேர் பதவிக் காலம் முடிகிறது.
தமிழக சட்டமன்றத்தில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். திமுக தரப்பில் வைகோவுக்கு ஒரு இடம் கொடுப்பதாக மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் உடன்பாடு செய்துவிட்டார்கள். எஞ்சிய 2 இடங்களில் ஒன்றை மன்மோகன்சிங்கிற்கு காங்கிரஸ் கேட்பதாக தகவல் வருகிறது.
அதிமுக தரப்பில் ஒரு இடத்தை அன்புமணிக்கு வழங்க, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய இரு இடங்களில் ஒன்றை மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக விட்டுக் கொடுக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக பாஜக தரப்பில் சிலர் அதிமுக தலைமையிடம் பேசியிருக்கிறார்கள். அதிமுக தலைவர்கள் இது குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் ஆவலுடனும் அதிமுக இருக்கிறது. ஜெய்சங்கருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்த கையுடன், அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கத்திற்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன.
ஒருவேளை அதிமுக தரப்பில் இசைவான பதில்கள் இல்லாதபட்சத்தில், குஜராத்தில் இருந்து ஜெய்சங்கர் தேர்வாகும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அமித்ஷா, ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மக்களவைக்கு தேர்வாகியிருப்பதால் அந்த இடங்களுக்கு புதிதாக ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.