கர்நாடாகாவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக-வின் மூத்த தலைவருமான எடியூரப்பா, தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக கூறி இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டம் கேலகோட் பகுதியில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவரின் வீட்டுக்கு எடியூரப்பா சென்றுள்ளார். ஆனால், அந்த வீட்டில் சமைத்த உணவை அருந்தாமல், ஹோட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை அருந்தியதாக கூறப்படுகிறது. எடியூரப்பாவின் இந்த நடடிவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தலித் சமூகம் என்பதால் தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக எடியூரப்பா மீது இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வெங்கடேஷ் என்பவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை கேலகோட் பகுதியில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு எடியூரப்பா வருகை தந்தார். அப்போது, ஊடகங்கவியலாளர்கள் முன்னிலையில், எடியூரப்பா காலை உணவை அந்த வீட்டில் வைத்து சாப்பிட்டார். ஆனால், எடியூரப்பா அருந்திய உணவு அவர் சென்றிருந்த அந்த தலித் வீட்டில் தயாரிக்கப்பட்டது அல்ல. ஹோட்டலில் இருந்து வாங்கி வரப்பட்டது.
பாஜக-வின் மூத்த தலைவரின் இந்த நடவடிக்கை சமூகத்தில் தவறான எண்ணத்தை பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான மாண்டியாவில் பல ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் தனது மாவட்ட மக்களின் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்திருக்கலாம்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை புகார் கிடைக்கப்பெற்றது. இந்த விஷயம் குறித்து தேவையானவற்றை ஆராய்ந்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதேபோல, எடியூரப்பா மற்றொரு தலித் சமூகத்தை சார்ந்தவரின் வீட்டில் உணவு அருந்தியதாகவும், அங்கேயும் இதேபோல நடந்து கொண்டதாகவும், அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்நாடாகாவில் உள்ள துமாகுரு மாவட்டம் குப்பி பகுதியில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா கட்சியின் மாநில தலைவரான எச் டி குமாராசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் ஜி பரமேஸ்வரா மற்றும் மக்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்த விவகாரத்தில் எடியூரப்பா குறித்து விமர்சித்துள்ளனர். எடியூரப்பாவின் இது போன்ற நடவடிக்கை தலித் சமூதாயத்தை கொச்சைப் படுத்தும் விதமாக இருக்கிறது என அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து எடியூரப்பா கூறும்போது: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் மதசாற்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள் தலித் சமூகத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தேவையில்லாமல் இந்த பிரச்சனையை எழுப்பிய அரசியல் கட்சித் தலைவர்கள் நான் உணவு அருந்திய அந்த தலித் வீட்டாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார்.