பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை பல்வேறு பிரச்சார வடிவங்களில் பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், பாலியல் வன்கொடுமைகளின் முகம் இன்னும் இன்னும் கோரமாகிக் கொண்டே இருக்கிறது.
தன் மனைவியாக இருந்தாலும், அவரது சம்மதமின்றி ஆண் ஒருவர் பாலியல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். திருமணத்தின் பெயரால் இத்தகைய கட்டாய பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தில், தன்னுடன் பாலியல் உறவு கொள்ள சம்மதிக்காத மனைவியின் பிறப்புறுப்பில் கணவர் ஆசிட் வீசிய கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.
கன்னூஜ் மாவட்டத்திலுள்ள பெஹ்ரின் கிராமத்தை சேர்ந்த வேத் பாலுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வேத் பால் தன் மனைவியை பாலியல் உறவு கொள்ள அழைத்தபோது, அதனை அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வேத் பால் தன் மனைவியை தாக்கி, ஏற்கனவே அவர் தன்னுடன் வைத்திருந்த ஆசிட்டை அவரது பிறப்புறுப்பில் வீசியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/acid-1-300x135.jpg)