இந்தியாவில் சாதிய ரீதியாக தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் தலித் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான கிணற்றில், அந்த கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள ’உயர்சமூக’த்தினராக கருதப்படுபவர்கள் ‘எண்டோசல்ஃபான்’ எனும் வேதி நச்சை கலந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்து தலித் மக்கள் குடிநீர் அருந்த கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சன்னூர் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. இந்த கிராமம் கல்புர்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ஏழு கிணறுகளில் ஒன்றை மட்டும் தான் தலித் மக்கள் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கிணறும் கிராம எல்லையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மற்ற கிணறுகளை அந்த கிராமத்தில் உள்ள உயர் வகுப்பினராக கருதப்படுபவர்களே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த கிணற்றின் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளரான தலித் ஒருவர், அந்நிலத்தை உயர் வகுப்பினராக கருதப்படும் ஒருவருக்கு விற்றார். இதனால், அந்த கிணற்றிலிருந்து தலித் மக்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என அவர்கள் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த கிணற்று நீரானது வேதிப்பொருட்கள் கலந்து நாற்றம் அடித்ததாக தலித் மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த கிணற்று நீரில் எண்டோசல்ஃபான் கலந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
அதன்பின், காவல் துறையினர் நிலத்தை வாங்கிய நபர் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.