/tamil-ie/media/media_files/uploads/2017/10/sushma-swaraj-7592.jpg)
மொழி புரியாததாலும், ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதாலும், காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு ஆளான ரஷ்ய இளைஞருக்கு, சென்னயிலுள்ள அதிகாரிகள் உதவி செய்வர் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரிகோட்டம் கோவிலில், கடந்த செவ்வாய் கிழமை வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தொப்பியை காண்பித்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, சிலர் அவருக்கு பணம் கொடுத்தனர். இந்நிலையில், அங்கு வந்த பக்தர்கள் சிலர் அந்த இளைஞர் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த எவாஞ்சலின் எவிக்மி என்பதும், இந்தியாவை சுற்றிபார்க்க வந்த நிலையில், அவரது ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால், அங்கு சிலர் பிச்சை எடுப்பதை பார்த்த எவாஞ்சலின், அங்கு அமர்ந்து பிச்சை எடுத்துள்ளார். மேலும், சைகையாலேயே தான் ரஷ்யாவுக்கு செல்ல உதவுமாறும் அங்கு கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் சென்னை ரயிலில் ஏற்றிவிட்டு தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தினர். தற்போது, அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார். அவரை ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, ”உங்களது ரஷ்ய நாடு எங்களின் நண்பன். சென்னையிலுள்ள அதிகாரிகள் உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வார்கள்”, என ட்வீட் செய்தார்.
Evangelin - Your country Russia is our time tested friend. My officials in Chennai will provide you all help. https://t.co/6bPv7MFomI
— Sushma Swaraj (@SushmaSwaraj) 10 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.