/tamil-ie/media/media_files/uploads/2017/08/46395146-857f-11e7-aa81-8a4dce36eef3.jpg)
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக, அல்ட்ரா சௌண்ட் ஸ்கேன் எடுத்த ஆண் ஒருவருக்கு, ’கர்ப்பப்பை நன்றாக உள்ளன’ என சோதனை முடிவு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.
மஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகர் கெய்க்வாட் என்பவருக்கு கடந்த மே மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன் குடும்ப மருத்துவரை அணுகினார். அவர், தீனானந்த மங்கேஷ்கர் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையில், ஒலி அலைகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் அல்ட்ரா சௌண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த மருத்துவமனை லதா மங்கேஷ்கர் மருத்துவ அறக்கட்டளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சாகர் கெய்க்வாட் அந்த மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதன்பின், அந்த பரிசோதனை முடிவுகளை மருத்துவர் அதிதி குஜராத்தி என்பவர் கையெழுத்திட்டு அளித்தார்.
அந்த பரிசோதனை முடிவில், அவரது “கர்ப்பப்பையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை, நன்றாக உள்ளது”, என குறிப்பிடப்பட்டுள்ளது என கெய்க்வாட் தெரிவித்தார். ஆணுக்கு எப்படி கர்ப்பப்பை இருக்க முடியும்? “ஒரு மருத்துவர் இந்த தவறை கூட சரிபார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார். இதை பெறுவதற்கு என்னை இரண்டரை மணிநேரம் காக்க வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த பரிசோதனை முடிவுகளை பெற 1000 ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக 700 ரூபாயும் செலுத்தினேன்.”, என கெய்க்வாட் தெரிவித்தார்.
இதற்காக, மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பும் கேட்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. “இனி எனக்கு மன்னிப்பு தேவையில்லை. இது சிறிய மருத்துவமனை இல்லை. மருத்துவ நடைமுறைகளில் ஏற்கப்பட்டிருக்கும் இந்த தவறு குறித்து மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”, என கெய்க்வாட் தெரிவித்தார்.
தவறான மருத்துவ சிகிச்சை மற்றும் அலட்சியமாக நடந்துகொள்ளுதல் கீழ், இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து, கெய்க்வாட் தன் வழக்கறிஞருடன் ஆலோசித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.