உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளதால், அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூத்த அதிகாரிகள் மூன்று பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் செல்லும் பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முசாஃபர் நகர் அருகே கதாவ்லி பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சிக்கியும், சிகிச்சை பலனின்றியும் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ரயிலின் முதல் 5 மற்றும் கடைசி 4 பெட்டிகளுக்கு இடைப்பட்ட 14 பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார்.
ரயில் விபத்துக்கு தீவிரவாதிகளின் நாச வேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கவும், புலனாய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் டிஎஸ்பி அனுப் சிங் தலைமையிலான தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், லேசாக காயமடைந்துள்ள ரயிலின் ஓட்டுனரிடம் அவசரகால பிரேக்கை அவர் அழுத்தினாரா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கதாவ்லி ரயில்வே டிராக்கில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டவர்களின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பராமரிப்பு பணிகள் குறித்து அப்பகுதியில் வரும் ரயில்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜூனியர் என்ஜினியர், சீனியர் செக்சன் என்ஜினியர், துணை என்ஜினியர் மற்றும் சீனியர் டிவிசனல் என்ஜினியர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வடக்கு ரயில்வேயின் சீனியர் டிராக் என்ஜினியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர், டிவிசனல் ரயில்வே மேலாளர், ரயில்வே வாரிய உறுப்பினர் ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3.5 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
அதேபோல், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.