Advertisment

உ.பி.,ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு; 80 பேர் படுகாயம்

விபத்துக்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
உ.பி.,ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு; 80 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் செல்லும் பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முசாஃபர் நகர் அருகே கதாவ்லி பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சிக்கியும், சிகிச்சை பலனின்றியும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

நேற்று மாலை சுமார் 5.46 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது எனவும், கதாவ்லி ரயில் நிலையத்தை சுமார் 105 கி.மீ வேகத்தில் அந்த ரயில் கடந்து சென்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயிலின் முதல் 5 மற்றும் கடைசி 4 பெட்டிகளுக்கு இடைப்பட்ட 14 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விபத்துக்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்கு தீவிரவாதிகளின் நாச வேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கவும், புலனாய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் டிஎஸ்பி அனுப் சிங் தலைமையிலான தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், லேசாக காயமடைந்துள்ள ரயிலின் ஓட்டுனரிடம் அவசரகால பிரேக்கை அவர் அழுத்தினாரா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3.5 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

அதேபோல், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Utkal Express Derailment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment