உத்ரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் பெண்கள் இருவரை 14 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அந்த நபர்கள் பரப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில், தனிமைப்படுத்தப்பட்ட சாலையின் வழியே இரு பெண்கள் தனியாக நடந்து செல்கின்றனர். அப்போது அங்கு வரும் 14 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்கின்றனர்.மேலும், அந்த பெண்களின் துப்பட்டாவை பிடித்து இழுக்கிறார்கள். தொடர்ந்து அந்த பெண்களை இழுக்கவும், தள்ளவும் செய்கின்றனர். இதனால், பயந்தில் உறைந்த அந்த பெண்கள் செய்வதறியாமல் தப்பிச்செல்ல முயல்கின்றனர். இந்த சம்பவத்தை அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. கடந்த 15 நாட்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
உத்ரபிரதேச முதலமைச்சராக சில மாதங்களுக்கு முன்னர் யோகி ஆதித்யநாத் பதவிறேற்றார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆன்டி-ரோமியோ என்னும் படையை அமைத்தார். எனினும், அந்த படை அமைக்கப்பட்ட போதிலும் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.