உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள காதா கிராமத்தில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக ஆட்களை படகில் ஏற்றியதனாலே தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படகில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாகவும், அதில் 10 பேர் கரைக்கு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த படகில் 35 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று மாஜிஸ்திரெட் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் தினகூலிக் கூலிக்கு வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது. பாக்பத் மாவட்டம் கதா கிராமத்தில் இருந்து ஹரியானாவில் உள்ள சோனிபட் பகுதிக்கு படகில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
20 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். இதனிடையே, பாக்பத் உடல்களை சாலையில் வைத்து உறவினர்களும் கிராம வாசிகளும் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தினால் போலீஸார் சிலர் காயமடைந்தனர். மேலும், வன்முறையை கட்டுப்படுத்த அப்பகுதிக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.