உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று (வியாழக்கிழமை) தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார்.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து நீக்கி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு அண்மையில் அறிவித்தது. இது, மதத்துவேசத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
மேலும், பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், “தாஜ்மஹாலை கட்டியவர் இந்துக்களை இந்தியாவிலிருந்தும், உத்தரபிரதேசத்திலிருந்தும் அகற்றும் வேலைகளில் ஈடுபட்டார். தாஜ்மஹாலை சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து நீக்கியபோது பலரும் வருத்தம் அடைந்தனர். எந்த வரலாற்றை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? தாஜ்மஹாலை கட்டியவர் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர். அப்படிப்பட்டவரை இன்னும் இந்திய வரலாற்றில் குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது.”, என கூறினார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தான் 26-ம் தேதி தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட உள்ளதாக யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
அதன்படி, யோகி ஆதித்யநாத் இன்று (வியாழக்கிழமை) தாஜ்மஹாலுக்கு செல்ல உள்ளார். தாஜ்மஹால் மட்டுமல்லாமல் அதனருகில் அமைந்துள்ள தாஜ்மஹால் பூங்காவுக்கு சென்று பார்வையிட உள்ளார். தாஜ்மஹாலில் சுமார் அரைமணிநேரம் செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாஜ்மஹாலில் ரூ.370 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, தாஜ்மஹால் முதல் ஆக்ரா கோட்டை வரையில், சுற்றுலா பயணிகளுக்காக வழித்தடம் அமைக்கும் திட்டத்திற்கு யோகி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், தூய்மை பணி குறித்த பெரும் பிரச்சார திட்டத்தையும் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இதில், பாஜகவினர் சுமார் 500 பேரும், தன்னார்வலர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.