ஷீதர் சன்னு சங்கர்லால்....! உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் போலீசார் நடத்திய என்கவுண்டர்களில், 30வது நபராக சுட்டுக் கொல்லப்பட்ட நபர். மார்ச் 20, 2017ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்ற பின், இதுவரை அங்கு நடத்தப்பட்ட என்கவுண்டர்களின் எண்ணிக்கை 921. அதில், 29 என்கவுண்டர்களில் 30 குற்றவாளிகளும், வெவ்வேறு என்கவுண்டர்களில் 3 போலீசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் 22, தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர்கள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று, அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுகுறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய கள ஆய்வில், குறைந்தது 29 என்கவுண்டர்கள் மூலம் தேடப்பட்ட குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய அடுத்த ஒன்றரை மாதத்தில் எட்டு என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது, புத்தாண்டு அன்று அதிரவைத்த மூன்று என்கவுண்டர்கள் உட்பட... இதில் 8 தேடப்பட்ட குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட, ஒரு கான்ஸ்டபிளும் உயிரிழக்க நேர்ந்தது.
ஆனால், உ.பி. அரசாங்கம் , "இதுவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை" என்று தெரிவித்துள்ளது.