உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுராவிலிருந்து ஜபல்பூர் வழியாக ஷக்திகஞ்ச் நோக்கி சென்ற விரைவு ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஓப்ரா பகுதி அருகே வந்த போது, தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில், ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் பயணித்த பயணிகள், தடம் புரளாத பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து எந்த வித தகவலும் வரவில்லை.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே கதாவ்லி பகுதியில், பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் விரைவு ரயில் கடந்த 19-ம் தேதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 90 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் அஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது காய்பியாத் விரைவு ரயிலும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஹவுராவிலிருந்து ஜபல்பூர் வழியாக ஷக்திகஞ்ச் நோக்கி சென்ற விரைவு ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஓப்ரா பகுதி அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு அண்மையில் ராஜினாமா செய்தார். அவரை பொறுத்திருக்குமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, அவருக்கு வர்த்தகத்துறையை ஒதுக்கியுள்ளார். சுரேஷ்பிரபுவிடம் இருந்த ரயில்வேதுறை பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.