Advertisment

காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயில் தொடக்கம்: புதிய அம்சங்கள், மேம்படுத்தல்கள் என்ன?

குஜராத் காந்திநகர் முதல் மும்பை இடையே இயக்கப்படும் நாட்டின் 3ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

author-image
sangavi ramasamy
New Update
காந்திநகர் - மும்பை வந்தே பாரத் ரயில் தொடக்கம்: புதிய அம்சங்கள், மேம்படுத்தல்கள் என்ன?

குஜராத் மாநிலம் காந்திநகர் தொடங்கி மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காந்திநகரில் இன்று (செப்டம்பர் 30) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் 3ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். ரயில்சேவையை தொடங்கி வைத்த பிரதமர் காந்திநகரில் இருந்து அகமதாபாத் கலுபூர் வரை சுமார் அரை மணி நேரம் ரயிலில் பயணம் செய்கிறார்.

Advertisment

வந்தே பாரத் ரயிலில் பிரதமர் முதன் முறையாக பயணம் செய்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு வந்தே பாரத் திட்டம் முதல் முதலாக டெல்லியில் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அதில் பயணம் செய்யவில்லை. டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் கத்ராவிற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 3 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

'வந்தே பாரத் 2.0'

வந்தே பாரத் 3-வது ரயில் பல புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது 'வந்தே பாரத் 2.0' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களிலிருந்து இந்த ரயிலில் சில மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களைப் போல வந்தே பாரத் ஒவ்வொரு ரயில்களிலும் மேம்படுத்தல்கள், புதிய அம்சங்கள் இருக்கும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்பு கூறியிருந்தார். ஆனால் அதன் பெயர் மாற்றப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த புதிய ரயில் விலை சுமார் ரூ.115 கோடி ஆகும். கடந்த ரயில்களை விட ரூ.15 கோடி அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் ரயில்களின் பயனர் கருத்து உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு புதிய ரயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய மேம்படுத்தல்கள் என்ன?

இந்த புதிய ரயில் தொடங்கி, மணிக்கு 160 கி.மீ வேகத்தை 129 வினாடிகளில் அடையும். இது முந்தைய ரயில்களை விட 16 வினாடிகள் வேகமாக இருக்கும். ஏனென்றால், இந்த ரயிலின் எடை 392 டன்கள், மற்ற இரண்டு ரயில்களை விட 38 டன்கள் இலகுவானது. மேலும் இந்த ரயில் தனது அதிகபட்ச வேகத்தை ஒரு கி.மீ குறைவாக அடையும்.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் ரயில் செல்லும்போது ரைடிங் இன்டெக்ஸ் 3.26 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 3.87 ஆக இருந்தது. ரைடிங் இன்டெக்ஸ் என்பது ரயில் இயக்கத்தின்போது பயணிகள் எவ்வளவு வசதியாகவும், நிதானமாகவும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பதாகும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ரயிலில் முந்தைய ரயில்களில் இல்லாத தானியங்கி எதிர்ப்பு மோதல் அமைப்பு கவாச் பொருத்தப்பட்டுள்ளது. ஆபத்து, பேரழிவு நேரங்களில் பயன்படுத்தும் வகையில் அலாரம் உள்ளது. புதிய ரயிலில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் பேட்டரி 3 மணி நேரம் தாங்கும். முன்பு இருந்தது 1 மணிநேர வரை மட்டுமே தாங்கும் அளவு கொண்டது.

வெளிப்புறத்தில் 8 பிளாட்ஃபார்ம் பக்க கேமராக்கள் உள்ளன. முன்பு இது 4 ஆக இருந்தது. மேலும் பயணிகள்-பாதுகாவலர் தொடர்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. தானியங்கி குரல் பதிவு அம்சமும் இந்த புதிய ரயிலில் இடம்பெற்றுள்ளது. 650 மிமீ வரை வெள்ளத்தில் இருந்து ரயில் பாதுகாப்பாக இருக்கும், முன்பு இது 400 மிமீ வரை மட்டுமே இருந்தது.

சிசிடிவி கேமரா வசதி

இந்த புதிய ரயிலில் அனைத்து வகுப்பு இருக்கைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்ப்பட்ட இடங்களில் ரயில் பெட்டி கண்காணிப்பு அமைப்பு, சிசிடிவி கேமரா வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ரயிலில் வினாடிக்கு 1 ஜிகாபைட் இணைய வசதியை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு வினாடிக்கு 100 மெகாபைட் இணைய வசதி மட்டுமே இருந்தது. தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள இணைய சேவை மூலம் ஆடியோ-வீடியோ நல்ல தரத்தில் ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும்.

வைஃபை வசதியுடன் கூடிய ஆன்போர்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. முன்பு 24 இன்ச் ஸ்கிரீன் இருந்தது.

உணவு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சார்பில் ராகி, பாகர், தானியங்கள், ஓட்ஸ், மியூஸ்லி போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் 'ஆரோக்கியம் மற்றும் குறைந்த கலோரி' கொண்ட உணவுகள் வழங்கப்படுகிறது. சாபு தானா, பாகர் மற்றும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளும் வழங்கப்படுகிறது.

முதன்முறையாக, குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக மால்ட் வகையில் தயாரிக்கப்பட்ட பானங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கடலை கொள்முதல் செய்து கடலை மிட்டாய் 'Peanut Chikki' வழங்கப்படுகிறது. உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே இதை செய்வதாக தெரிவித்துள்ளது.

400 வந்தே பாரத் ரயில்கள்

மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2023க்குள் நாடு முழுவதும் மேலும் 72 ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது. இரவு நேர பயணங்களுக்காக ஸ்லீப்பர் பெர்த்களுடன் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment