வந்தே மாதரம் பாடுவது என்பது அவரவர் விருப்பம் என்றும், வந்தே மாதரம் பாடாதவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது: வந்தே மாதரம் பாடலை பாடுவது என்பது தனிநபர் சார்ந்த விஷயம். விருப்பப் பட்டவர்கள் அதனை பாடலாம், விருப்பம் இல்லாதவர்கள் அதனை பாடாமலும் இருக்கலாம். இந்த பாடலை பாடாமல் இருப்பதால், அவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், வந்தே மாதரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மோசமான சிந்தனை உடையவர்கள். நாட்டின் மீது அக்கரை இல்லாதையே அது காட்டுவதாக அமையும் என்று கூறினார்.
சமீபத்தில் தமிழகத்தில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவெ தேசிய கீதம் திரையரங்குகளில் பாடப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்வி நிறுவனங்களில் வாரம் ஒரு முறையும், அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒரு முறையும் கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரத்தில் வந்தே மாதரம் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், அவர்களிடம் அதற்கான உரிய விளக்கத்தை பெறலாம், கட்டாயப்படுத்தப்பட்டால் நாட்டின் மீதான வெறுப்புணர்வு அதிகரிக்கும் என நீதிபதி முரளிதரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற இந்த உத்தரவு எதிரொலித்தது. பாஜக எம்எல்ஏ ராஜ் புரோகித், மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளிலும், சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
அப்போது, இதற்கு சட்டமன்றத்தில் எதிர்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் அபு அஸிம் அஜ்மி, தேசத்தை விட்டு என்னை வெளியேற்றினாலும் பரவாயில்லை, நான் வந்தே மாதரம் பாடலை பாட மாட்டேன் என்று தெரிவித்தார்.
இதேபோல, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.எல்.ஏ வாரிஸ் பதான் கூறும்போது: எனது தலையை நோக்கி துப்பாக்கியை வைத்தாலும், என்னால் வந்தே மாதரம் பாடலை பாட முடியாது என்று கூறினார்.