"அப்போ ஒல்லியா இருந்தார்... இப்போ குண்டாகிட்டார்"! - பெண் அரசியல்வாதிகளின் தோற்றத்தை வைத்து கேலி செய்வது சரியா?

தமிழகத்தில் கூட இதுபோன்ற நிலைமை நீடிப்பது தான் கொடுமையின் உச்சம்

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில், ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவதே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது என்று புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை.

நம் கண் முன்னே பெண்கள் அனுபவிக்கும் அத்தனை இன்னல்களையும் நாம் தினம் பார்த்துக் கொண்டே தான் கடந்து செல்கிறோம்.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும், இன்னமும் ஒரு பெண், இரவில் சுதந்திரமாக நடந்து செல்ல முடிவதில்லை என்பது நாம் நன்கு அறிந்த கசப்பான உண்மை.

ஒரு ஆண், மனைவியை இழந்துவிட்டு, இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால், ஒரு பெண்ணால் அப்படி வாழ்ந்துவிட முடியுமா?

முன்பு இருந்த நிலைக்கு, சமூகத்தில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, ஆணாதிக்க வர்க்கத்தினால், ‘யமுனை’ கூட பாழாக்கப்பட்டு வருகிறாள்.

ஏதோ, சாதாரண பெண்கள் மட்டும் இதுபோன்ற இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம். கடைநிலையில் இருந்து உயர்ந்த நிலையில் உள்ள பெண்கள் வரை இதே நிலைமை தான்.

அப்படியொரு சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், “ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்பு ஒல்லியாக இருந்தார், இப்போது குண்டாகிவிட்டார். இதனால் மிகவும் களைப்படைந்துவிடுகிறார். எனவே, அவருக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் வசுந்தரா ராஜேவின் அரசாங்கத்தை பற்றி குறை கூறி இருக்கலாம். அவரது அரசியல் செயல்பாடுகள், நிர்வாகத்திறன், அரசியல் ஆளுமை, மக்கள் நலத்திட்டங்கள் என்று அவரை விமர்சிக்க எவ்வளவோ காரணிகள் இருக்கின்றன.

ஆனால், சரத் யாதவோ, வசுந்தரா ராஜேவின் உடலமைப்பை விமர்சனம் செய்து வாக்கு கேட்டிருப்பது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் கூட இதுபோன்ற நிலைமை நீடிப்பது தான் கொடுமையின் உச்சம். இங்கும் கூட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி, இன்று தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை வரை எவ்வளவோ பெண் தலைவர்கள் பலவேறு தருணங்களில் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மீம் என்ற பெயரில் பெண் தலைவர்களின் தோற்றத்தை கொச்சைப்படுத்துவது என்பது நமது மாநிலத்தில் சகஜமாகிவிட்டது.

பெண்களை இழிவுப்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது நியாயமா என்பதை இழிவுப்படுத்துபவர்கள் ஒரு நொடியாவது யோசித்தால் நல்லது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close