கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் வாழ்ந்துவந்த வெஜிடேரியன் (சைவம் மட்டுமே உண்ட) முதலை ஞாயிற்றுக்கிழமை (அக்.09) உயிரிழந்தது. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் குளத்தில் உள்ள முதலைக்கு திங்கள்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Advertisment
இந்த முதலை கோவிலில் உள்ள அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு குளத்தில் வாழ்ந்துவந்துள்ளது. மாமிச பிராணியான முதலை, சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது பெரும்பாலான பக்தர்களை ஈர்த்தது. இந்த முதலைக்கு கோவிலில் பூஜைகள் முடிந்தவுடன் இறைவனுக்கு படைக்கப்படும் கோவில் பிரசாதங்கள் மற்றும் பாயாசம் உணவாக வழங்கப்படும்.
அதை உண்டு மட்டுமே 7 தசாப்தங்கள் (70 ஆண்டுகள்) முதலை உயிர் வாழ்ந்துள்ளது. எனினும் இந்த முதலை எப்படி குளத்துக்கு வந்தது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. 1945ஆம் ஆண்டு இந்தக் கோவில் குளத்தில் முதலை ஒன்றை ஆங்கிலேய சிப்பாய் சுட்டுக் கொன்றதாகவும், அதன் பின்னர் சில நாள்கள் கழித்து மற்றொரு முதலை தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காசர்கோடு ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் முதலையார் பாபியாவுக்கு பிரசாதம் வழங்கப்படும் இடம்
இந்த முதலை இதுவரை எந்த பக்தருக்கும் இடைஞ்சல் அளித்தது இல்லை. பின்னாள்களில் இந்த முதலை பாபியா (Babiya) என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் முதலமையின் மறைவுக்கு பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான சோபா கரந்த்லாஜே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “முதலை பாபியா வைகுண்ட பதவி அடைந்தது. 70 ஆண்டுகளாக அனந்த பத்மநாப சுவாமியின் அரிசி மற்றும் வெல்லத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தது” எனத் தெரிவித்துள்ளார். காசர்கோடு ஸ்ரீ அனந்த பத்மநாத சுவாமி திருக்கோயில், கேரளத்தின் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பத்மநாபாவின் (விஷ்ணு) மூலஸ்தானம் இந்தக் கோயில் என்று நம்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“