பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சமீபத்தில் மத்திய சுகாதார துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற அல்ஃபோன்ஸ் கன்னந்தானம் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”யார் பெட்ரோல் வாங்குகின்றனர்? பைக், கார் வைத்திருப்பவர்கள்தானே. அவர்கள் நிச்சயம் பட்டினியாக இல்லை. இவற்றை வாங்க முடிந்தவர்கள் பணம் செலவழித்து பெட்ரோல், டீசல் வாங்க மாட்டார்களா?”, என கூறினார்.
மேலும், “பைக், கார் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டும். அப்படி செலவழித்து வாங்க முடிந்தவர்களுக்கு தான் நாங்கள் வரி விதிக்கிறோம்”, என தெரிவித்தார்.
“நலிவடைந்தவர்களின் நலத்திற்காகத் தான் அரசாங்கம் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதை அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. அனைவருக்கும் வீடுகள், கழிப்பறைகளை கட்டித் தருகிறது”, என கூறினார்.
கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து, பெட்ரோல், டீசலின் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதையடுத்து இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தனது முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.