ஆக.,11-ல் பதவியேற்பு: வெங்கையா நாயுடுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹமீது அன்சாரி நாட்டின் 12-வது குடியரசு துணைத் தலைவரானார். மீண்டும் 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, அவர் 2-வது முறையாக துணைத் தலைவரானார்.

ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 98.21 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குக்களின் எண்ணிக்கை மாலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 516 வாக்குகள் பெற்று வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக வருகிற 11-ம் தேதியன்று வெங்கையா நாயுடு பதவியேற்கவுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தாலைவர் அமித்ஷா ஆகியோர் அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவை ஆரத் தழுவி அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேபோல், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,”குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துகள். அவர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் நாட்டுக்கு பணி யாற்றுவார் என நம்புகிறேன். கட்சியிலும் ஆட்சியிலும் அவருடன் பணியாற்றிய காலத்தை என்னால் என்றென்றும் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

வெங்கையா நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி தன்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், வெங்கையா நாயுடுவை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

×Close
×Close