இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். இது தொடர்பாக அருண் ஜெட்லி அடித்த நகைச்சுவை ‘கமெண்ட்’ சுவாரசியமானது.
ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 11-ம் தேதி (இன்று) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்த ஹமீது அன்சாரிக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி (நேற்று) பிரிவு உபசாரவிழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெங்கையா நாயுடு நேற்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இன்று காலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், தீனதயாள் உபாத்யாயா உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று வெங்கையா அஞ்சலி செலுத்தினார். காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் வெங்கையா நாயுடுவின் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
பட்டுச் சட்டை, பட்டு வேஷ்டி அணிந்து காலை 10.15 மணியளவில் வெங்கையா பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் மாநிலங்களவைக்கு தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பும் வெங்கையாவுக்கு வந்து சேரும்.
தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அற்புதமாக அடுக்கு மொழியில் பேச வல்லவர் வெங்கையா நாயுடு. இவரது பேச்சுக்கலை, அவையை நடத்த பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘அதிகம் பேசக்கூடியவரான வெங்கையா இனி பேச்சைக் குறைத்துக்கொண்டு, எம்.பி.க்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டியிருக்கும். இது நிச்சயம் அவருக்கு சவால்தான்’ என நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார்.