குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர்களான வெங்கையா நாயுடு, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த நியமன உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 790 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் களமிறக்கப்பட்டதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டார்.
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது. அதில், 99 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனையடுத்து, பாஜக உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், தற்போது மத்திய தகவல் ஒலிபரப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர்களான வெங்கையா நாயுடு மற்றும் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.