ஆகஸ்ட் 5-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மேலும், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் எனவும், அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற ஜூலை மாதம் 18-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

×Close
×Close