மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் துணை குடியரசு தலைவர்

தான் மாயாவதி மீது மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஜே.குரியன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என புதன் கிழமை வலியுறுத்தியிருந்தார்.

தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து அவையில் பேசுவதற்கு தாம் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அளித்த ராஜினாமா கடிதத்தை துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய் கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடியது.

அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான மாயாவதி நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசத்துவங்கினார். குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஹரான்பூரில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து பேச முற்பட்டார்.

அப்போது,அவருக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தைத் தாண்டி மாயாவதி பேசியதால், துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், மாயாவதியை தன் உரையை முடித்துக்கொள்ளுமாறு கூறினார். இந்நிலையில், தன்னை தலித்துகள் பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்கவில்லை என மாயாவதி குற்றம்சாட்டினார். மேலும், தன்னை பேச அனுமதிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் மாயாவதி தெரிவித்தார். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தான் பேச அனுமதிக்கப்படாதபோது அவையில் இருப்பதற்கே தனக்கு உரிமை இல்லை எனவும் அவர் எச்சரித்தார்.

அவ்வாறு கூறிய சிறிது நேரத்திலேயே ராஜினாமா கடிதத்தையும் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பினார். அதில், நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்காதபோது தான் பதவி விலகுவதே சிறந்தது என குறிப்பிட்டிருந்தார்.

தவறான புரிதலால் அவை நடந்துவிட்டதாகவும், தான் மாயாவதி மீது மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஜே.குரியன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாயாவதி திரும்ப பெற வேண்டும் என புதன் கிழமை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

மாயாவதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2018-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close