குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக்கழகமான எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெங்கைய நாயுடு சனிக்கிழமை காலை 8 மணியளவில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராஃபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாவது, ”சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இதய அடைப்பை நீக்கக்கூடிய வகையில் அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது”
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு, கடந்த ஆகஸ்டு மாதம் குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார். அதற்கு முன்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சோதனைகளின் முடிவுகள் அடிப்படையில், அவருக்கு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.