குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் நாளை மாலையே அறிவிக்கப்படவுள்ளன.
தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதன்படி, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று (நாளை) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தொடர்ந்து, கடந்த மாதம் 18-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர்.
ஆளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களவையின் 545 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 245 உறுப்பினர்கள் என மொத்தம் 790 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
நாளை காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும், நாளை மாலையே அதன் முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகள் வெளியானதும் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது தெரிந்து விடும்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.