Advertisment

துணை ஜனாதிபதி ஆனார் வெங்கையா : அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில், வெங்கையா நாயுடு அபார வெற்றி பெற்றார்..

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
துணை ஜனாதிபதி ஆனார் வெங்கையா : அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து

தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

Advertisment

அதன்படி, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று (இன்று) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. முன்னதாக, கடந்த மாதம் 18-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர்.

ஆளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவையின் 545 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 245 உறுப்பினர்கள் என மொத்தம் 790 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

முதலாவதாக பிரதமர் மோடி தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதன் பின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மொத்தமுள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் தேர்தலில் பதிவாகின. இதில், பாஜக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் தலா 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. மேலும், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பிக்களும் வாக்களிக்கவில்லை. மொத்தமாக 98% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டதில், மொத்தம் 516 வாக்குகள் பெற்று வெங்கையா நாயுடு வெற்றிப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 11 எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை தவறாக செலுத்தியதால் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு தேர்வாகியுள்ளார். இந்த வெற்றி குறித்து பேட்டியளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், "வேட்டி கட்டி ஒருவர் துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று இருப்பது தமிழர்களாகிய நமக்கும் பெருமை தான்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெங்கய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Venkaiah Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment