ரயிலில் வழங்கப்பட்ட எலுமிச்சை பழச்சாறு தரம் குறைந்ததாகவும், காலாவதியான நிலைமையிலும் இருந்ததாக, முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தசரா விழாவை முன்னிட்டு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட எலுமிச்சை பழச்சாறை (Fresca brand) அருந்தியவுடன் அவருக்கு குமட்டல் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அவர் தனக்கு வழங்கப்பட்ட பழச்சாற்றை திறந்து பார்த்தபோது அதில் ஏதோவொன்று மிதந்துகொண்டிருந்ததாக முன்னாள் அமைச்சர் தினேஷ் திரிவேதி குற்றம்சாட்டினார். அந்த பழச்சாறு தரம் குறைந்ததாகவும், காலாவதியானதாகவும் இருந்ததாக அவர் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் திரிவேதி, ரயில்வே நிர்வாகம் இருப்பில் உள்ள உணவுபொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், இத்தகைய தரமற்ற உணவு பொருட்களை பயணிகளுக்கு விநியோகிப்பவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து, நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அச்செய்திக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த இந்திய ரயில்வே அமைச்சகம், இச்சம்பவம் தொடர்பாக உணவு வழங்கல் மேற்பார்வையாளர் தினேஷ் திரிவேதியை சந்தித்ததாகவும், புகார் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஃப்ரெஸ்கா பிராண்ட் உணவுப்பொருளிம் தரத்தை ஆராய ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி: ரயில்வேயின் உணவு தரத்தால் அச்சம்