பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன பணியாளர் நியமன விண்ணப்பத்தில், திருமண வாழ்வின் நிலை குறித்த இடத்தில், ‘விர்ஜின்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே அளித்த விளக்கம் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பணியாளர் நியமன விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்களின் திருமண வாழ்க்கை குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வி விண்ணப்பதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், ஒரு இடத்தில், “நீங்கள் திருமணம் ஆகாதவரா? அல்லது கணவன் அல்லது மனைவியை இழந்தவரா? அல்லது விர்ஜினா? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதில், விர்ஜினா என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பது, கன்னித்தன்மை கொண்டவரா என்ற ரீதியில் கேட்கப்பட்டிருப்பதாகவும், அது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளது என, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அக்கல்வி நிறுவனத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல், “எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம். அவர்களுடைய விண்ணப்பத்திலும் இவ்வாறுதான் கேட்கப்பட்டிருக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே அந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மாற்றினால் நாங்களும் விண்ணப்பத்தில் மாற்றம் செய்வோம்.”, என கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே, “’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்.”, என விளக்கம் அளித்தார்.
இந்த சர்ச்சை குறித்து முதலமைச்சர் அலுவலகம், அக்கல்வி நிறுவனத்திடம் விண்ணப்பத்தின் நகலை கேட்டிருப்பதாகவும், எதற்காக அக்கேள்வி முதலாவதாக இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.