தனிப்பட்ட தாக்குதல்களால் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளிலிருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார். தனிப்பட்ட விமர்சனங்களால் ராஜினாமா.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளிலிருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார். தற்போதைக்கு பிரவீன் ராவ் தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

அவரது ராஜினாமா வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டதாக நிறுவன செயலர் ஏ.ஜி.எஸ். மணிகாந்தா தெரிவித்தார். தற்போதைக்கு விஷால் சிக்கா அந்நிறுவனத்தின் துணை செயல் தலைவராக மட்டும் பதவி வகிக்கிறார். புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர்களை நியமிக்கும் வரை அந்நிறுவனத்தில் விஷால் சிக்கா பனிபுரிவார் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்தது.

விஷால் சிக்கா ராஜினாமா செய்தி வெளியானதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் சிக்காவின் ராஜினாமா குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 31, 2018-ஆம் ஆண்டுக்குள் புதிய தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதுவரை விஷால் சிக்கா துணை செயல் தலைவராக இந்நிறுவனத்தில் தொடர்வார். வாடிக்கையாளர் உறவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றில் விகாஷ் சிக்கா கவனம் செலுத்துவார். தற்காலிகமாக யூ.பி.பிரவீன் ராவ் தற்காலிக தலைமை செயல் அலுவலராக பதவி வகிப்பார்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

தன் ராஜினாமா குறித்து விஷால் சிக்கா கூறியதாவது, “நான் இந்நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலராக என் பயணத்தை துவங்கினேன். மென்பொருள், செயற்கை அறிவு, புதுமை ஆகியவற்றில் எனது கவனத்தை செலுத்தினேன். இதனால் நான் பெருமை அடைந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியதற்காக குறிப்பாக நான் இந்நிறுவனத்தின் தலைவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.”, என கூறினார்.

ராஜினாமா கடிதத்தில், இன்ஃபோசிஸ் நிறுவன குழு உறுப்பினர்கள் தன்மீது சுமத்தும் தனிப்பட்ட விமர்சனங்களை சுமத்தி வந்ததாகவும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டதாகவும், தன் மீது தாக்குதல்கள் அதிகரித்ததாகவும் விஷால் சிக்கா குறிப்பிட்டார்.

×Close
×Close