ஓய்வை ஏற்க யோகி ஆதித்யநாத் மறுப்பு: மனம் திறந்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய பொறியியல் துறையில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஸ்ரீதரன். ரயில் போக்குவரத்து துறையில், ஸ்ரீதரன் ஆற்றிய அரும் பணிகள் அளப்பரியவை. பொதுமக்களால் “மெட்ரோ மேன் ” என செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 1932-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது 85 வயதாகும் ஸ்ரீதரன், ராமேஸ்வரத்தை தாக்கிய பெரும் புயலால் தமிழகத்தில் இருந்து துண்டித்துக் கிடந்த ராமேஸ்வரத்தை, பாம்பன் பலத்தை சீரமைத்ததன் மூலம் மீண்டும் இணைத்தவர். ஆறு மாதங்கள் காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில், 50 நாட்களுக்குள்ளாகவே பாலத்தை புனரமைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்திய ரயில்வே துறையின் பெருமையை பறைசாற்றும் கொங்கன் ரயில் பாதை திட்டத்தையும் இவர்தான் தலைமையேற்று முடித்துக் கொடுத்தவர். கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். டெல்லி மெட்ரோ ரயில் மிக வெற்றிகரமாக செயல்படுவதற்கு மூலக் காரணமாக இவர் கருதப்படுகிறார். தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கீழ் நாட்டின் பிற பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தலைமை வகித்தவர். அண்மையில் நடைமுறைக்கு வந்த கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஸ்ரீதரன் தலைமை வகித்துள்ளார்.

லக்ணோ, கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம், ஜெய்ப்பூர் மெட்ரோ, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பணிச்சுமை காரணமாக லக்ணோ, கான்பூர் மெட்ரோ ரயில் திட்ட ஆலோசகர் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கடிதம் அளித்துள்ளார். இது தொடர்பாக யோகியை நேரில் சந்தித்து வந்துள்ளார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனம் திறந்த ஸ்ரீதரன்,”லக்ணோ, கான்பூர் மெட்ரோ ரயில் திட்ட ஆலோசகர் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக யோகி ஆதித்யநாத்திடம் கூறினேன். ஆனால், உங்களை ராஜினாமா செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக முதல்வர் கூறி விட்டார். வாரணாசி, ஆக்ரா, கோரக்பூர், மீரட் பணிகளை குறித்து கூறியும் பலனில்லை” என்றார்.

கோரக்பூரில் ஆய்வுகள் தொடங்கி விட்டதாக தெரிவித்த அவர், லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமான 10.5 கி.மீ தூரத்துக்கான பணிகள் முடிவடைந்து தயாராக உள்ளது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநில மெட்ரோ பணிகள் குறித்து தெரிவித்த ஸ்ரீதரன், வாரணாசி மெட்ரோ பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. ஆனால், அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், கோயில்களுக்கு அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் வருவதை யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்றார்.

நாட்டின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னமும் கூடுதல் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீதரன். சீனாவில் ஆண்டொன்றுக்கு 300 கி.மீ கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 22 கி.மீ அளவு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. குறைந்தபட்சம் 200 கி.மீ அளவுக்காவது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதும், பலமாக சிரித்த ஸ்ரீதரன், அது வெறும் வதந்தியே. அதுகுறித்து நான் யாரையும் அணுகவில்லை. 85 வயதில் ஒருவர் குடியரசுத் தலைவராவது சாத்தியமில்லை என்றார்.

×Close
×Close