மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறுவது குறித்து எந்த தகவலும் வரவில்லை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நாளை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பிரதமராக மோடி பதவியேற்ற பின், 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. மொத்தம் 72 அமைச்சர்கள் கொண்ட மோடியின் அமைச்சரவையில் சுமார் 12 பேர் வரையில் வெளியேற்றிவிட்டு, அதே எண்ணிக்கையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்துக்கு வசதியாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, இணையமைச்சர்கள் அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, சஞ்சய் குமார் பல்யான், பக்கன் சிங் குலஸ்தே ஆகியோரும் பதவி விலகியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அத்துறையின் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருந்தார். அவரை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதேபோல், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர் இதுவரை மவுனத்தையே கடைபிடித்து வருகிறார். இவர்கள் தவிர வேறு சில அமைச்சர்களும் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
அருண் ஜெட்லியிடம் நிதி, பாதுகாப்புத்துறை ஆகிய இரண்டு பொறுப்புக்கள் உள்ளன. ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கூடுதல் பொறுப்புகளை வைத்துள்ளனர். கூடுதல் பொறுப்புகள் புதிய அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என தெரிகிறது.
அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் கொடுக்கப்படும் எனவும், எதிர்வரவுள்ள கர்நாடகா, ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் இணைந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறுவது குறித்து எந்த தகவலும் வரவில்லை. அது தொடர்பான எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. ஊடகங்கள் மூலம் மட்டுமே அது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைக்கிறது என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக-வுடன் நெருக்கம் காட்டி வரும் அதிமுக-விற்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.