டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தேர்தல் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. நாட்டில் ஜனநாயக முறைப்படி நடக்கும் பொதுத் தேர்தலைப் போன்று, காங்கிரஸ் கட்சியிலும் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதற்காகவே, அக்கட்சியில் ஒவ்வொரு முறையும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகிறது. எவ்வாறு அவர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அஹமத் பட்டேல், ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, பி.கே. ஹரி பிரசாத், சி.பி.ஜோசி, திக்விஜய் சிங், குலாம் நபி ஆசாத், ஹெமோ ப்ரோவா சிக்கா, ஜானார்தனன் திவேதி, கமல் நாத், மோஹன் பிரகாஷ், மோதிலால் வோரா, முகுல் வாஷ்னிக், சுசில் குமார் சிண்டே, சுசிலா டிரியா, மல்லிகர்ஜுனா கார்கே, அசோக் கெலாட், கே.சி.வேணுகோபால், அவினாச் பாண்டே ஆகிய 20 உறுப்பினர்கள், 9 நிரந்தர உறுப்பினர்கள், 5 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் பணி குழு தலைவர் தேர்தலுக்கான தேதிகளை இறுதி செய்யும்.
பின்னர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மதுசூதன் மிஸ்த்ரி, புபநேஸ்வர் கலித்தா ஆகியோர் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தேர்தலுக்கான பணிகளை செய்யும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியும் தேர்தல் குழு அறிவித்த பின்னர் வேட்புமனு தாக்கலுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
பின்னர் வேட்பு மனு சரிபார்ப்பு பணி, வேட்புமனு திருப்ப பெறுதல் என சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகளே பின்பற்றப்படும். தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் அனுமதி உண்டு.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தேதியன்று ஒவ்வொரு மாநில தலைநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும். சுமார் 15000 பொது குழு உறுப்பினர்கள் வாக்குப்பதிவில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 700 பொது குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
வாக்குபதிவு நிறைவடைந்த பின்னர் வாக்கு பெட்டிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, வாக்குகள் தேர்தல் குழு முன்னிலையில் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு தேதியில் தற்போதைய தலைவர் புதிய தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.