புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்: நாளை பதவியேற்பு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நேற்று நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஏ.கே.ஜோதி இன்று ஓய்வு பெறுகிறார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஏ.கே.ஜோதி இன்று ஓய்வு பெறுவதை தொடர்ந்து, ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவி ஏற்க உள்ளார்.

யார் இந்த ஓம் பிரகாஷ் ராவத்?

ஓம் பிரகாஷ் ராவத் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பட்டமும், லண்டனில் சமூக வளர்ச்சி திட்டம் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றவர். 1977-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றவர் ஓம் பிரகாஷ் ராவத். பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேர்தல் ஆணையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடைசியாக கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை அமைச்சக செயலராக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தின் ஆட்சியராகவும் (1983-86) மற்றும் இந்தோர் மாவட்டத்தின் ஆட்சியராக (1986-88) காலகட்டத்தில் பதவி வகித்தார்.

மத்திய அரசில் கடந்த 1993-ஆம் ஆண்டு பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இயக்குநர் மற்றும் இணை செயலராக பதவி வகித்தார். மேலும், மத்திய பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையராகவும், விவசாய துறை செயலராகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், கூட்டுறவு துறை செயலராகவும், பணியாற்றினார். மேலும், கடந்த ஆகஸ்டு 2004-ஆம் ஆண்டு அம்மாநில முதலமைச்சரின் முதன்மை செயலாளராக பதவி வகித்தார். ஜனவரி 2006-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.

மேலும், மத்தியபிரதேசத்தின் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றியபோது, திறம்பட பணிபுரிந்தமைக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு பிரதம மந்திரி விருதை பெற்றார்.

×Close
×Close