/tamil-ie/media/media_files/uploads/2017/08/Industrial-wastebluedog.jpg)
நவி மும்பை பகுதியில் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால், நாய்கள் நீல நிறத்தில் மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கசாடி ஆற்றில் அங்குள்ள தலோஜா தொழிற்பேட்டையிலிருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஆற்றை உணவிற்காக கடக்கும் பெரும்பாலான நாய்கள் நீல நிறத்தில் மாறுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நவி மும்பை மாநகராட்சி மேற்கொண்ட நீர் பரிசோதனையிலும், அந்த ஆற்று நீரில் நச்சுத்தன்மை வாய்ந்த குளோரைடு அதிகளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குளோரைடு தாவரங்கள் மற்றும் நீரியல் உயிரினங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலோஜா தொழிற்பேட்டையில் 1,000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உணவு தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த கழிவுகளால், மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் கசாடி ஆறு மாசடைவதை 13 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கசாடி ஆற்றைக் கடக்கும் நாய்கள் நீல நிறமாக வெளிவருவதை அப்பகுதி விலங்குகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து மஹராஷ்டிரா மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தனர்.
சுமார் 5 நாய்கள் இவ்வாறு நிறம் மாறி வெளிவந்ததாக கூறப்படுகிறது. சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுத்திகரிக்காமல் சாயக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.