சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி புறக்கணிப்பது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள். இந்த பாதுகாப்பில், தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள், குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும்.
அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குஜாராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. ராகுலின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக - ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் தாக்குதலுக்கு காரணம் என ராகுல் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனை பாஜக மறுத்தது. மேலும், மாநில அரசு வழங்குவதாக தெரிவித்த குண்டு துளைக்காத காரை புறக்கணித்து விட்டு சாதாரண காரில் அவர் பயணித்ததாகவும் பாஜக-வினர் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்க தவறவில்லை. இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களது கடும் அமளியால் மக்களவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,"சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை ராகுல் புறக்கணிப்பது ஏன்" என கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் எங்கே போகிறார் என்பது தெரிய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 72 நாட்களில் ஆறு வெளிநாட்டு பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், அந்த சமயங்களில் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அவர் புறக்கணித்துள்ளார். வெளிநாட்டு பயணங்களில், எஸ்பிஜி பாதுகாப்பை புறக்கணிப்பதன் மூலம் ராகுல் எதனை மறைக்க விரும்புகிறார் என தெரிய வேண்டும். இது எஸ்பிஜி சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, பாதுகாப்பு பிரச்னையிலும் அலட்சியம் காட்டும் செயல் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.