நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை ஏன்? தேசியக் கொடியின் மரியாதை போய்விட்டதா?

ஒரு நடிகைக்கு எதற்கு முழு அரசு மரியாதை?

By: February 28, 2018, 5:47:31 PM

துபாயில் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை இரவு குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மறைவு சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, திரைத் துறையில் உள்ளவர்களையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாட்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அஞ்சலிக்குப் பின் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள பார்லி பில்லே பகுதியில் மயானத்துக்குச் சென்ற இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, சமூக தளங்களில் பலரும், ‘நடிகர் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் ஏன் அரசு மரியாதை செலுத்த வேண்டும்?’, ‘எந்தவித அரசுப் பணியிலும் இல்லாத ஸ்ரீதேவிக்கு ஏன் அரசு மரியாதை அளிக்கணும்?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, அவரது உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்ததை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து நாம் அரசியல் விமர்சகர்களிடம் பேசிய போது, இந்திய ஜனநாயக நாட்டில், ஒரு மாநிலத்தின் முதல்வர் நினைத்தால், அம்மாநிலத்தைச் சேர்ந்த யாருடைய மறைவுக்கு வேண்டுமானாலும், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த அதிகாரம் உண்டு என கூறுகின்றனர்.

அதாவது, மும்பையில் நிரந்தரமாக வசித்து வந்த ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கிற்கு, முழு அரசு மரியாதை செலுத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு அதிகாரம் உண்டு என்கின்றனர்.

யாருக்கு அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை, முதல்வர் தனது கேபினட் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்க முடியும் எனவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீதேவி விஷயத்தில், அவர் ஒரு நாடு போற்றிய நடிகை. அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவருடைய 54 வயதில் 50 வருடங்களை சினிமாவிற்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர். இன்னும் டெக்னிக்கலாக, விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்திய அரசாங்கத்தால் ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கவுரவம் செய்யப்பட்டவர். இதனால், ஸ்ரீதேவிக்கு முதல்வரின் ஒப்புதலுடன் முழு அரசு மரியாதை செய்யப்பட்டதில் தவறே கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Why government respect on actress sridevi funeral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X