பல்கலைக்கழங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை நிறுத்திவிடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் துணை வேந்தர்களை நேரடியாக நியமனம் செய்வதாக கூறியதற்கு எதிராக மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் 9 பல்கலைக்கழங்களின் துணை வேந்தரை நேரடியாக ஆளுநர் ஆனந்த போஸ் நியமனம் செய்ய உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்திவிடுவதாகவும், மாநில அரசை தொடர்ந்து ஆளுநர் எதிர்த்தால் ராஜ் பவன் முன்பு தர்ணாவில் ஈடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் தன தன்யே என்ற அரங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் “ தற்போது மரியாதைக்குரிய ஆளுநர் அங்கே அமர்ந்து கொண்டு, அவரே தனியாக கல்லூரிகள், பல்கலைகழங்கள், இப்படி எல்லாவற்றையும் பார்த்துகொள்கிறார். நள்ளிரவில் துணை வேந்தரை மாற்றுவது தொடர்பாக நீங்கள் இதற்கு முன்பு கேள்விபட்டதுண்டா? முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, முன்னாள் நீதிபதிகள் நள்ளிரவில் கொண்டு வரப்படுகிறார்கள். அவரது உலகத்தில் அவர் நினைத்ததையெல்லாம் ஆளுநர் செய்துகொண்டிருக்கிறார். நான் பல்கலைக்கழங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்திவிடுவேன். அப்போது எப்படி துணை வேந்தர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க முடியும்? எப்படி ஆசிரியர்கள் சம்பளம் வழங்க முடியும் என்பதை நான் பார்க்கிறேன். பழிக்கு பழி வாங்கப்போகிறேன். இந்த முறை சமரசம் என்பது மட்டும் கிடையாது.
அவர் ஒன்றுமே செய்வதில்லை. நாங்கள் சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தால், அதற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மறுக்கிறார். நமது சட்டத்தின்படி ஆளுநர் இப்படி நடந்துகொள்ளக்கூடாது. இதுபோன்று மாநில அரசுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வந்தால் நான் ராஜ்பவன் முன்பு தர்ணாவில் ஈடுபடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் கட்சிகள், மம்தா பானர்ஜி அரசை விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சவுமியா அஜி ராய் கூறுகையில் “ ஆளுநர் செயல் கண்டிக்கதக்க ஒன்று. ஆனால் மம்தா பானர்ஜி அரசும், அவரது கட்சியும் ஆளுநரை விமர்சிக்கும் விதம் விமரும்பத்தக்கதாக இல்லை” என்று அவர் கூறினார்.
சிபிஐ( எம்) கட்சியின் தலைவர் சுஜன் சக்கரபர்த்தி கூறுகையில் “ மம்தா பானர்ஜி அரசு எல்லா விதத்திலும் தோல்வியை தழுவி உள்ளது. இதை மறைப்பதற்கு தற்போது ஆளுநரை விமர்சிக்கின்றனர்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“