’மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவன்’, ’வரதட்சணை அதிகம் தராததால் மருமகளை கொலை செய்த மாமியார்’, இம்மாதிரியான செய்திகளைத் தான் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், போதைக்கு அடிமையாகிய தன் மகனிடமிருந்து மருமகளை காப்பாற்ற பெண் ஒருவர், தன் மகனையே கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மஹராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. அன்வாரி இத்ரிஸி என்பவருக்கு மூன்று மகன்கள். இதில், அவருடைய கடைசி மகன் நதீம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் முன்பு அலகாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால், நதீமுக்கு போதை பழக்கம் இருப்பது அவர் மனைவிக்கு தெரியாது. இந்நிலையில், நதீம் தினமும் போதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவது வழக்கமாகியது. இதனைத் தாங்க முடியாமல் அப்பெண் திருமணமாகி ஐந்து மாதங்களிலேயே தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, தன் மகனின் போதை பழக்கத்தை நிறுத்துவதாக உறுதிகூறி அன்வாரி, தன் மருமகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். மேலும், “உன்னை மீண்டும் என் மகன் அடித்தால் நான் தடுப்பென்.”, எனவும் அன்வாரி நம்பிக்கை அளித்தார்.
ஆனால், நதீமின் பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தினமும் போதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவது தொடர்கதையானது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு, நதீம் வழக்கம்போல் போதையில் நிதானம் இன்றி வீட்டுக்கு வந்தார். இதனால், அன்வாரி தன் மற்ற மகன்கள் மற்றும் மகள்களை அருகிலுள்ளவர் ஒருவரின் வீட்டுக்கு அனுப்பிவைத்து தான் மட்டும் இருந்தார். அப்போது, நதீம் பெற்ற தாய் எனக்கூட பாராமல் அன்வாரியை போதையில் அடித்து துன்புறுத்தினார். ஒருகட்டத்தில் நதீம் சோர்வடையவே, அன்வாரி தனது துப்பட்டாவால் தன் மகனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்.
மேலும், சடலத்துடனேயே அந்த இரவு முழுவதும் உறங்கினார். மறுநாள் காலை நதீமின் மனைவி வீட்டுக்கு வந்தபிரகே இச்சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த காவல் துறையினர் அன்வாரியை கைது செய்தனர்.
போதைக்கு அடிமையாகி தினந்தோறும் தன் மருமகளை அடித்து துன்புறுத்தும் மகனை, தாயே கொலை செய்தது அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.