மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 20-வது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்த வகையில் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இணைந்தனர். இதில் ஒரு சில விதவை பெண்கள் மற்றும் இறந்த விவசாயிகளின் தாய்மார்கள் போராட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 2,000 பெண்கள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பஞ்சாபின் மால்வா பிராந்தியத்தில் இருந்து பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) ஏற்பாடு செய்திருந்த 17 பேருந்துகள் மற்றும் 10 டிராக்டர்களில், பயணம் செய்து, திக்ரி எல்லையிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள உக்ரஹான் போக்குவரத்து முகாமில், இறந்த உறவினர்களின் படங்களுடன் ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் இணைந்த பெண்கள் பெரும்பாலும் சங்ரூர் மாவட்டத்தின் ஜக்பால் கிராமத்தைச் சேர்ந்த இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களும், குறைந்த நிலம் வைத்துள்ள சிறு விவசாய குடும்பங்களின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட, குர்மேஹர் கவுர் (34), என்ற விதவை பெண் கூறுகையில், 2007 ம் ஆண்டு எனது இளம் வயதில் எனது கணவர் ஜுக்ராஜ் சிங் உயிரிழந்தார். அப்போது முதல் கிராமத்தில் நான் தனியாக வசித்து வருகிறார். "எனக்கு 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், நிதி பிரச்சினைகள் மற்றும் கடன் காரணமாக என்னால் நிலத்தை பராமறிக்க முடியவில்லை. இதனால் நான் என் இளைய மகனை சரியாக கவனிக்க முடியாத்தால், என் சகோதரியிடம் கொடுத்தேன். என் மூத்த மகன் எனது பெற்றோருடன் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். அவர்கள் அவரைப் படிக்க உதவுகிறார்கள்.
என் கணவரின் மரணத்திற்குப் பிறகு, நான் எங்கள் நிலத்தை விவசாயத்திற்காக குத்தகைக்கு கொடுத்தேன், தினசரி கூலி உழைப்பை செய்து வருகிறேன், மாதத்திற்கு சுமார் 1,800-2,000 சம்பாதிக்கிறேன். என் மூத்த மகனுக்கு இப்போது 18 வயது, அவர் படிப்பு முடிந்ததும், அவர் விவசாய வேலைகளை ஏற்றுக்கொள்வான், ”என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டில் தனது கணவர் குர்ச்சரன் சிங்கை இழந்த பால்ஜீத் கவுர் (52) என்ற பெண் கூறுகையில், “எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திலிருந்து நாங்கள் மிகக் குறைவாகவே வருமானம் பெற முடியும். ஆனால் என் கணவருக்கு அவருக்கு ரூ .5 லட்சம் கடன் இருந்தது. மேலும் என தங்கையை திருமணம் செய்து வேண்டி இருந்தது. அதனால் நான் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தேன்.
தற்போது என் இளைய மகன் விவசாயத்தை கவனித்துக்கொள்கிறான். இந்த போராட்டத்தில் சேர நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களைப் போன்ற சிறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எங்களிடம் உள்ளதையும் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.