”விவாகரத்துக்குப் பின் பணிபுரியும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை”: மும்பை உயர்நீதிமன்றம்

விவாகரத்து வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பணிபுரியும் பெண்ணுக்கு, விவாகரத்துக்குப் பின் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற தேவையில்லை என தெரிவித்தது.

சின்னத்திரை நடிகை ஒன்றின் விவாகரத்து வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவர் பணிபுரியும் பெண்ணாக இருப்பதால், விவாகரத்துக்குப் பின் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற தேவையில்லை என தெரிவித்தது.

சின்னத்திரை நடிகை ஒருவர் தன் கணவரிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் சின்னத்திரை நடிகரே. இவர்களுடைய விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருவரும் பிரிந்ததிலிருந்து தன் கணவர் தனக்கு எவ்விதமான ஜீவனாம்சமும் தரவில்லை என நடிகை கூறியதையடுத்து, அவருக்கு மாதம் 50,000 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என அவருடைய கணவருக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தனக்கு 2005 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நிலையான வருமானம் இருந்ததாகவும், தற்போது அம்மாதிரி நிலையான வருமானம் ஏதுமில்லை எனவும் அவருடைய கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, தனக்கு ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவிடுமாறு அந்நடிகை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனக்கு தற்போது எவ்விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இல்லை எனவும், அதனால் என்னுடைய வாழ்வாதாரத்திற்கு தன்னுடைய வயதான பெற்றோரையே தான் சார்ந்திருப்பதாக அந்நடிகை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது மனைவி மற்றும் அவரது பெற்றோர், அவருடைய செல்லப்பிராணிகளுக்கான செலவையும் தானே பார்த்துக்கொண்டதாக நடிகையின் கணவர் நீதிமன்றத்தில் பதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விவாகரத்து கோரிய நடிகையின் கணவருக்கு எவ்விதமான நிரந்தர வேலையும் தற்போது இல்லாததாலும், நடிகை சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருமானத்தை ஈட்ட முடியும் என்பதாலும், நடிகைக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

×Close
×Close