சீனாவில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் பிரிக்ஸ் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது, நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டில் அந்தந்த நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் மூன்று நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3-ம் தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். டோக்லாம் பதற்றத்துக்கு பின்னர், இரு நாட்டு தலைவர்களிடையே நடைபெறும் முதல் இரு தரப்பு சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல், இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இரண்டாவது நாளான நேற்றைய கூட்டத்துக்கு பின்னர், ஜியாமென் பிரகடனம் வெளியிடப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், பயங்கரவாதம் குறித்த கருத்துகள் 17 முறை இடம் பெற்றிருந்தது.
தலிபான், சர்வதேச ஐ.எஸ். அல்கொய்தா, கிழக்கு துர்க்கிஷ்தான் ஐ.எஸ். இயக்கம், உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். இயக்கம், ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ் இ-முகமது, தெஹ்ரிக் ஐ தலிபான் (பாகிஸ்தான்), ஹிஸ்ப் உத்-தாஹ்ரிர் ஆகிய குழுக்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலை மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று அந்த பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது. முதன்முறையாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ள விஷயம், இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்த பிரச்சினையை இந்தியா எழுப்ப சீனா அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த முறை அவை இடம்பெற்றுள்ளது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும், இந்த விஷயத்தை வரும் நாட்களில் சீனா எவ்வாறு கையாளப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செயலாளர் பிரீத்தி சரண் கூறுகையில், “மாநாட்டில் பயங்கரவாதம் குறித்த விவகாரத்தை பிரதமர் மோடி மாநாட்டில் எழுப்பினார். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளின் தலைவர்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடவேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினர்” என்றார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச பயங்கரவாதம், சட்டவிரோத பணபரிமாற்றம், உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை தடை செய்வது உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனான இன்றைய சந்திப்புக்கு பின்னர், பிரதமர் மோடி மியான்மர் செல்லவுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு மியான்மருக்கு மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில், ரோஹிங்யா இனத்தவருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆங் சான் சூகி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.